போதைப்பொருள் விவகாரம்.. தீபிகா படுகோன் உள்ளிட்டோருக்கு திடீர் சம்மன்!
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மரண வழக்கில் போதை மருந்து புகார் புயலை கிளப்பி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு காரணமாக போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் சுஷாந்தின் காதலி ரியாவை கைது செய்தனர். பாலிவுட் பிரபலங்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது பற்றி விசாரணையை ரியாவிடம் அதிகாரிகள் தொடங்கிய பிறகு அவர் பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 25பேர்களின் பெயர்களைத் தொடர்புப்படுத்தி இவர்களுக்கெல்லாம் பாலிவுட்டில் போதைப் பொருள் உட்கொள்ளுதல் மற்றும் போதை மருந்து விற்பவர்களிடம் தொடர்பில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, நடிகை தீபிகா படுகோன், நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், ஃபேஷன் டிசைனர் சிமோன் கம்பட்டா ஆகியோருக்கு போதை மருந்துத் தடுப்புப் பிரிவு போலீஸார் திடீர் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், தீபிகா படுகோன் வெள்ளிக்கிழமையும், மற்ற நடிகைகள் வியாழக்கிழமையும் விசாரணை செய்யப்படுவார்கள் என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.