பாகிஸ்தான் வாலிபர் தனது மனைவிக்காக கொடுத்த திருமண பரிசு என்ன தெரியுமா?
பாகிஸ்தானைச் சேர்ந்த சுகைப் அகமது என்ற வாலிபர் தனது மனைவிக்காக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்து அசத்தியுள்ளார்.
உனக்கு நிலவை பிடித்து தரவா? என காதலியை தன்னுடைய வழிக்கு கொண்டு வர காதலன்கள் சும்மா கதை விடுவது உண்டு. ஆனால் உண்மையிலேயே ஒருவர் தனது மனைவிக்காக நிலவில் இடம் வாங்கி போட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்..... பாகிஸ்தானை சேர்ந்த சுகைப் அகமது என்பவர் தான் தனது மனைவிக்காக நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி போட்டுள்ளார். சுகைப்புக்கும், மதிஹா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த கையோடு மனைவியிடம் சோகைப் அகமது, 'உனக்கு என்ன பரிசு வேண்டும்?' என்று கேட்டுள்ளார். முடிந்தால் எனக்கு நிலவில் கொஞ்சம் நிலம் வாங்கித் தாருங்கள் என்று தமாஷுக்காக மதிஹா கூறினார். 'சரி வாங்கித்தருகிறேன்' என்று சுகைப் கூறியுள்ளார். ஆனால் உண்மையிலேயே தனது கணவன் வாக்குறுதியை காப்பாற்றுவார் என கனவிலும் கூட மதிஷா எண்ணவில்லை.
சில நாட்கள் கழித்து நிலவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி இருப்பதாக சுகைப் தனது மனைவி மதிஹாவிடம் கூறினார். ஆனால் அதை அவர் நம்பவில்லை. தன்னுடைய மனைவி தான் கூறியதை நம்பவில்லை என புரிந்துகொண்ட சுகைப், நிலவில் நிலம் வாங்கியதற்கான ஆவணத்தை காண்பித்தார். அதன்பிறகு தான் மதிஹாவுக்கு நம்பிக்கை வந்தது. இது குறித்து அறிந்த பாகிஸ்தான் மீடியாக்கள் மதிஹாவிடம் கேட்டபோது, திருமண பரிசாக நிலவில் எனது கணவர் எனக்கு ஒரு ஏக்கர் நிலம் வாங்கித் தந்துள்ளார் என என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் கூறியபோது அவர்கள் யாரும் நம்பவில்லை.
நான் ஏதோ தமாஷ் செய்வதாகவே அனைவரும் கருதினர். பின்னர் அதற்கான ஆவணங்களை காண்பித்த பிறகு தான் அவர்களும் நம்பினர் என்றார் மதிஹா. இன்டர்நேஷனல் லூனார் லேண்ட் ரிஜிஸ்டரில் இருந்துதான் 45 டாலர் கொடுத்து நிலவில் இவர் நிலத்தை வாங்கியுள்ளார். சீ ஆஃப் வேப்பர் என்ற நிலவில் ஒரு பகுதியில் சுகைப் நிலம் வாங்கியுள்ளார். சமீபத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் 2018ல் நிலவில் சீ ஆஃப் மஸ்கோவி என்ற இடத்தில் நிலம் வாங்கி இருந்தார். இவர் மட்டுமல்லாமல் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உட்பட சிலரும் சந்திரனில் நிலத்தை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.