விஜயகாந்த்துக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி..
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் தாமோதரன் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர்.
மாநிலத்தில் இது வரை 5 லட்சம் பேருக்கு மேல் தொற்று பாதித்திருக்கிறது. அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. விஜயகாந்த் கடந்த 2 ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூருக்குச் சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை.
அவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் நலமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.இதே போல், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தற்போது நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.