மதுரையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்த முத்துமணியிடம் போனில் பேசிய ரஜினிகாந்த்.. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்குத் தைரியம் சொல்லி ஆறுதல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபகாலமாக தங்களது ரசிகர்களிடம் நேரடியாக போனில் பேசி நெருக்கம் காட்டுகிறார். சில தினங்களுக்கு முன் முரளி என்ற ரசிகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ரஜினி அவருக்கு ஆறுதல், தைரியம் சொல்லி ஆடியோ மெசேஞ் அனுப்பினார். அதில், முரளி உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நீங்கச் சீக்கிரமே குணம் அடைஞ்சிடுவீங்க குணம் ஆனபிறகு உங்க குடும்பத்தோடு என்னை வீட்டில் வந்து பாருங்க, நான் உங்களைச் சந்திக்கிறேன் என்றார். இந்த ஆடியோ வெளியாகி வைரலானது. தற்போது தனது ரசிகரிடம் ரஜினிகாந்த் போனில் நேரடியாகப் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

ரஜினிக்கு முதன்முதலாக 40 வருடங்களுக்கு முன் மதுரையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் முத்துமணி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அறிந்து முத்துமணியிடம் ரஜினிகாந்த் போனில் பேசினார். அவரிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார். ரஜினியின் குரல் கேட்டு உற்சாகம் அடைந்த முத்துமணி தனக்கு நுரையீரலில் சளி அடைத்து சிரமப்படுவதாகவும் கொரோனா தொற்று எதுவும் இல்லை என்றும் உடல் பாதிப்பு பற்றி விளக்கமாகக் கூறினார். அதைப் பொறுமையாக கேட்ட ரஜினி அவருக்கு ஆறுதலும், தைரியமும் கூறியதுடன் உடல்நிலை குணம் அடைய இறைவனிடம் வேண்டுவதாகக் கூறினார். முத்துமணி மனைவியும் ரஜினியுடன் பேசினார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News >>