பெங்களூருவில் கொடூரம் ஒன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்
பெங்களூருவில் ஒன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.பெங்களூரு ஹரோஹல்லி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதி அருகில் உள்ள ஒரு கோவிலில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அந்தக் கோவிலை ஒட்டியுள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த குழந்தை வீட்டை ஒட்டியுள்ள ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து முகத்தில் காயங்களுடன் அந்த குழந்தையை ஒரு 15 வயது சிறுவன் அழைத்துச் செல்வதை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். சந்தேகமடைந்த அவர் அந்த சிறுவனிடம் கேட்டபோது, அந்த குழந்தை கீழே விழுந்து விட்டதாகவும் அதைக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளான்.
உடனே அந்த நபர் அந்த குழந்தையை பெற்றோரிடம் அழைத்துச் சென்று விவரத்தைக் கூறினார். தொடர்ந்து பெற்றோர் அந்த குழந்தையை கக்கலிப்புராவில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த குழந்தைக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் தொடர்ந்து நடத்திய பரிசோதனையில் அந்தக் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்தக் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு சென்ற நபரிடம் விசாரித்தபோது அந்த சிறுவன் குறித்த விவரம் தெரிய வந்ததது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனைப் பிடித்து விசாரித்த போது அவன் தான் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தான் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த சிறுவனைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.