இந்தியாவில் கொரோனா பாதிப்பு 57 லட்சத்தை தாண்டியது..
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 57 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இது வரை 91,149 பேர் இந்நோயால் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. தற்போது, அமெரிக்காவில் 71 லட்சத்து 30 ஆயிரம் பேரும், பிரேசிலில் 46 லட்சத்து 27 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. நேற்று புதிதாக 86,508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 57 லட்சத்தைத் தாண்டியது. மொத்தம் 57 லட்சத்து 32,519 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இவர்களில் 46 லட்சத்து 74,958 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 9 லட்சத்து 66,382 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1129 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 91,149 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.