ஜெயலலிதா முதல்வராக காரணம் நடராஜன் தான்! - சந்திரலேகா

ஜெயலலிதா முதல்வராக சசிகலாவின் கணவர் நடராஜன் தான் காரணம் என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா கூறியுள்ளார்.

மறைந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஸ்டாலின், வைகோ, துரைமுருகன், பொன்முடி, கி.வீரமணி, நாஞ்சில் சம்பத், வைரமுத்து, பாரதிராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும் போது "நான் தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, மக்கள் தொடர்பு அதிகாரியாக நடராஜன் இருந்தார். நல்ல உழைப்பாளி. எந்த வேலையை கொடுத்தாலும், சிறப்பாக செய்து முடிக்கக்கூடியவர். அந்த நேரத்தில் மின்விநியோகத்தில் சிறந்த மாவட்டமாக இந்த மாவட்டத்தை அறிவித்தார்கள். அப்பொழுது எனக்கு உறுதுணையாக இருந்தவர் நடராஜன்.

அதற்கு பிறகு நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். கடைசி வரை நண்பர்களாக இருந்து வந்தோம். எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது. புரட்சித் தலைவர் இறந்தபிறகு, அம்மா அரசியலே வேணாம் என்று ஒதுங்கிய பிறகு, அவர் கூட இருந்தார். ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன் தான் காரணம்” என தெரிவித்துள்ளார்.

1982ஆம் ஆண்டு கடலூரில், மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகா மூலம்தான், அப்போது அரசு செய்தி தொடர்பாளராக இருந்த நடராசனுக்கு, ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்து தொடர்ப்பு ஏற்பட்டது. நடராசன் காலப்போக்கில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிப்போனதும் குறிப்பிடத்தக்கது.

 

More News >>