ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்ட 2 வயது குழந்தை: ஹரியானாவில் பரபரப்பு..!

ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் மாவட்டத்திலுள்ள ஒரு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை சரக்கு ரயிலின் கீழ் சிக்கிக்கொண்டது.ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ளது பல்லாப்ஹர் ரயில் நிலையம். வழக்கமாகவே இது மக்கள் நெருக்கமற்ற ரயில் நிலையமாகும். ரயில் போக்குவரத்து அதிகம் இல்லாததால் தற்போது வெறிச்சோடியுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தன் 2 வயது தம்பியுடன் விளையாடியுள்ளான். இருவரும் தண்டவாளத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது, டெல்லியிலிருந்து ஆக்ரா சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் அவ்வழியே வந்துள்ளது. ரயிலைப் பார்த்த அண்ணன் நகர்ந்துவிட, குழந்தை மட்டும் தண்டவாளத்திலிருந்துள்ளது.

தண்டவாளத்தின் நடுவே குழந்தை இருப்பதைக் கண்ட அதிர்ந்த ஓட்டுநர் திவான் சிங், உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். ஆனால் ரயில் எஞ்ஜின் குழந்தையைக் கடந்ததும்தான் நின்றுள்ளது. பதறியபடியே எஞ்ஜினை விட்டு இறங்கிய ஓட்டுநர் திவான் சிங் மற்றும் உதவி ஓட்டுநர் அதுல் ஆனந்த் இருவரும் குழந்தையைத் தேடியுள்ளனர்.

ரயிலின் அடியின் சிக்கிய குழந்தை பயத்தில் அழுது கொண்டிருந்ததை அவர்களால் நம்ப இயலவில்லை. குழந்தையை ஆசுவாசப்படுத்தி, மெதுவாக வெளியே தூக்கினர். தெய்வாதீனமாகக் குழந்தைக்கு காயமேற்படவில்லை. ஓட்டுநர்கள் குழந்தையைத் தாயிடம் ஒப்படைத்துள்ளதாக ஆக்ரா மண்டல ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More News >>