டெல்லி துணை முதல்வருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி..

டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருக்கிறார். சிசோடியாவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயண அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அந்த வைரஸ் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதற்காக மேக்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ஏற்கனவே கொரோனா பாதித்து, வென்டிலேட்டரில் சுவாசிக்கும் அளவுக்கு உடல்நிலை மோசமானது. அதன்பிறகு அவர் கொரோனாவில் இருந்து மீண்டு திரும்பி வந்தார்.

இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவரான சரத்யாதவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் விசாரித்ததாகவும் சரத்யாதவின் மகள் சுபாஷினி தெரிவித்தார்.

More News >>