லாக் டவுன் படுத்தும் பாடு விவசாயி ஆன சூப்பர் ஸ்டார்..!
கொரோனா லாக் டவுன் காலத்தில் எல்லோரையும் போல வீட்டில் சும்மா இருக்காமல் வயலில் இறங்கி விவசாயம் செய்து வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.கொரோனா லாக் டவுன் பலரது வாழ்க்கையையும் முடக்கிப் போட்டு விட்டது. காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றால் இரவில் மட்டுமே வீடு திரும்புபவர்கள், வீட்டைவிட்டு நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என வெளியே தங்கி இருப்பவர்கள் உட்பட அனைவரும் பல மாதங்களாக தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் எதிர்பாராமல் கிடைத்த விடுமுறை நாட்களை ஓவியம் வரைவது, பாட்டுப் பாடுவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் செலவழித்து வருகின்றனர். மற்ற துறைகளில் பணிபுரிபவர்களைப் போலவே சினிமா துறையில் இருப்பவர்களும் சூட்டிங் இல்லாமல் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். பல நடிகர், நடிகைகள் தங்கள் வீடுகளில் இருக்கும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி சமீபத்தில் தான் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் படங்களை வெளியிட்டிருந்தார். 69 வயதிலும் அவரது கட்டுக்கோப்பான உடலைப் பார்த்து ஆச்சரியம் அடையாதவர்கள் யாரும் இல்லை.
ஆனால் பிரபல நடிகர் மோகன்லால் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடாமல் தன் வீட்டுத் தோட்டத்தில் விவசாயம் பார்த்து நல்ல விளைச்சலைப் பார்த்திருக்கிறார். லாக் டவுன் தொடக்க சமயத்தில் 5 மாதங்களாக மோகன்லால் சென்னையில் உள்ள வீட்டில் தான் இருந்தார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் அவர் சொந்த மாநிலமான கேரளாவுக்குச் சென்றார். கொச்சியில் அவரது வீட்டை ஒட்டி சிறிது விவசாய நிலம் உள்ளது.அந்த நிலத்தில் கடந்த இரு மாதங்களாக மோகன்லால் விவசாயம் பார்த்து வருகிறார். தற்போது அந்த நிலத்தில் வாழை மற்றும் காய்கறிகள் விளைந்துள்ளன.
தினமும் காலையிலும், மாலையிலும் பல மணி நேரம் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, களை பறிப்பது, மண்வெட்டியால் குழி தோண்டுவது எனத் தீவிர விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தார். தனக்கு நடிக்க மட்டுமல்ல, விவசாயமும் நன்றாகவே தெரியும் என்று கூறும் மோகன்லால், விரைவில் திரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைய உள்ளார்.