கோடியில் ஒருவர் பாடும் நிலா பாலு .. வாழ்க்கை ஒரு கண்ணோட்டம்..
திரைப்பட பின்னணி பாடகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் மின்னும் நட்சத்திரமாக இருந்து பின்னர் காணாமல் போயிருக்கிறார்கள். வானில் என்றைக்கும் சுடர் விடும் நிலவு போல் நிரந்தமாக திரைவானில் ஒளிவீசும் நிலாவாக தனக்கென ஒரு இடம் பிடித்துக் கொண்டவர் எஸ்பி.பாலசுப்ரமணியம்.திரையுலகில் ஒரு இடம் பிடிக்க வேண்டுமென்றால் முதலில் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அந்த இடத்தை தனது இனிமையான குரல் மூலம் பிடித்திருந்தார் எஸ்பிபி.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களின் இதயங்களில் தென்றலாகத் தாலாட்டிக் கொண்டிருக்கிறது. 50 வருடத்தில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி உலக சாதனை படைத்திருக்கிறார்.இவர் 1946ம் ஆண்டு ஜூன் மாதம் 4 ம் தேதி மெட்ராஸ் மாகாணத்தில்(இப்போது ஆந்திரப் பிரதேசமாகப் பிரிந்துள்ளது) எஸ்.பி. சம்பமூர்த்தி- சகுந்தலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவருக்கு 5 சகோதரிகள் மற்றும் 2 சகோதரர்கள் ஆவார்கள்.
சிறுவயதிலிருந்தே எஸ்.பி.பிக்கு பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் ஏதாவது ஒரு பாடலை ராகத்தோடு பாடிக்கொண்டே இருப்பார். இவர் சென்னையில் ஒரு கல்லூரியில் பொறியியல் படித்தார். 1964ம் ஆண்டு கல்லூரியில் நடந்த தெலுங்கு இசை நிறுவனம் நடத்திய போட்டியில் பங்கேற்று முதல் பரிசு வென்றார். அன்றைக்கே அவர் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான பாதைகளைத் தேடிச் சென்றார்.தெலுங்கு இசையமைப்பாளர் இசையில் ஸ்ரீ மரியாத ராமண்ணா படத்தில் தனது முதல் பாடலைப் 1966 ம் ஆண்டு பாடினார். தொடர்ந்து கன்னடப் படங்களுக்குப் பாடல்கள் பாடியிருக்கிறார்.
1969 ம் ஆண்டு ஜெமினிகணேசனின் சாந்தி நிலையம் படத்திற்கு இளைய கன்னி என்ற பாடலை பாடினார். ஆனாலும் அந்த பாடலுக்கு முன்னதாக எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப் படத்திற்காக அவர் பாடிய ஆயிரம் நிலவே வா என்ற பாடல் முதலில் திரைக்கு வந்து பிரபலம் ஆனது. சினிமாவில் மெதுவாகத் தொடங்கிய இவரது பயணம் பின்னர் வேகமெடுத்தது.பெரும்பாலும் பிரபல நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன். ஜெய்சங்கர், கமல்ஹாசன். ரஜினிகாந்த் என பலருக்கும் தொடர்ச்சியாகப் பல படங்களில் பாடி வந்தார். இதுமட்டுமா? தமிழ் திரையுலகில் 4 தலைமுறை நடிகர்களுக்கு அவர் பாடி இருக்கிறார்.
பின்னணி பாடகி எஸ்.ஜானகி, பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, வாணி ஜெயராம் ஆகியோருடனும் அதன் பின்னர் வந்த பல்வேறு இளம் பாடகிகளுடனும் இணைந்து பாடினார். இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இசையில் பாடிய பல பாடல்கள் சாதனை படைத்தன. சங்கரா பரணம் என்ற 1980ம் ஆண்டு தெலுங்கு படத்தில் இவர் பாடிய கர்நாடக சங்கீதத்தை மையாகக் கொண்டு பாடிய பாடல் இவருக்குத் தேசிய விருதுபெற்று தந்தது. எஸ்பிபி முறைப்படி சங்கீதம் கற்காதவர். ஆனாலும் கர்நாடக சங்கீத பாடல்களைத் தப்பில்லாமல் பாடி கர்நாடக இசைக் கலைஞர்களையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
இதுபோன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு அவரிடம் வந்தால் உடனே இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று மறுத்து விடுவார். நீங்கள் தான் பாட வேண்டும் என்று வற்புறுத்தினால் அதற்கான நேரம் எடுத்துக்கொண்டு அந்த பாடலுக்கான பயிற்சி பெற்று பாடுவார். கர்நாடக இசையை கற்காவிடாலும் அது சம்பந்தமான பாடல்கள் பாடும்போது அவர் பயிற்சி எடுத்துப் பாடியதால் தான் காலத்துக்கும் அந்த பாடல்கள் நிலைத்து நிற்கிறது.மின்சார கனவு (1996) படத்தில் பாடிய தங்கத் தாமரை மகளே பாடலுக்குத் தேசிய விருது பெற்றார். இசையமைப்பாளர்கள் கேவி.மகாதேவன், விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் , தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, அனிரூத் என எல்லா இசை அமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பாடி இருக்கிறார்.
6 முறை தேசிய விருது, நான்கு முறை பிலிம் பேர் விருது, 25 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் பெற்றார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், பாக்யராஜ், சல்மான்கான் ஆகியோர் படங்கள் பிற மொழியில் டப்பிங் செய்யும் போது எஸ்பிபிதான் அவர்களுக்கு டப்பிங் பேசுவார். இதில் கமலுக்காக மட்டும் 120 படங்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார். இது தவிர 45 படங்களுக்கு மேல் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தும் இருக்கிறார்.
1989 ம் வருடத்திலிருந்து இந்தி நடிகர் சல்மான்கானுக்காக 1989ம் ஆண்டு முதல் பல காதல் பாடல்களை லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடினார்.இன்றைக்கு எஸ்பிபிக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டது என்றதும் அவருக்காக இவர்கள் எல்லோரும் அவர் நலப்பெறப் பிரார்த்தனை செய்ததற்கு அவர்கள் எல்லோருடனும் எஸ்பிபிக்கு இருந்த பாசப்பிணைப்பு தான் என்பதை மறுப்பதற்கில்லை. திரையுலக நட்சத்திரங்களின் எண்ணிக்கை ஒரு எண்ணிக்கைக்குள் அடங்கிவிட்டாளும் எஸ்பிபி என்ற பாடகரின் குரலில் ஈர்க்க்பட்ட ரசிக நெஞ்சங்களை எண்ணிவிட முடியாதளவுக்கு பல கோடி பெறும். எஸ்பிபி கோடியில் ஒருவர் என்றால் அது மிகையாது.
இன்றைக்கு 25 செப்டம்பர் 2020ல் காலமானார். அந்த சாதனையாளருக்கு தி சப் எடிட்டர். காம்மின் இதய அஞ்சலி.