பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடைபெறும்.. தேர்தல் தேதிகள் அறிவிப்பு..

பீகார் சட்டசபைக்கு மூன்று கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்.28, நவ.3 மற்றும் நவ.7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

ஆனால், கொரோனா பரவல் இன்னும் நீடிப்பதால், சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. தேர்தலைத் தள்ளி வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடியானது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் இன்று(செப்.25) பீகார் சட்டசபைத் தேர்தல் தேதிகளை அறிவித்தது. தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நிருபர்களுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 10ம் தேதி நடைபெறும். ஒவ்வொரு கட்டத்திலும் எந்தெந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பது அறிவிக்கப்படும்.

தேர்தல் பிரச்சாரத்தில் சமூக ஊடகங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தவறான தகவல்களைப் பகிர்வது, கட்டுப்பாடில்லாமல் செயல்படுவது போன்றவற்றைத் தடுக்க வேண்டும். எனவே, சமூக ஊடகங்களைத் துஷ்பிரயோகம் செய்யாதவாறு அவற்றின் நிர்வாகங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு சுனில் அரோரா தெரிவித்தார்.

More News >>