விபச்சாரம் சட்டத்தின் கண்களில் குற்றமல்ல மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
மும்பையில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இளம்பெண்களை விடுவித்த உயர்நீதிமன்றம், வயதுக்கு வந்த பெண்கள் எந்த தொழிலையும் செய்ய உரிமை உண்டு என்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வருடம் மும்பை மலாடு அருகே உள்ள சிஞ்சோலி பிந்தர் என்ற இடத்திலுள்ள ஒரு பெண்கள் விடுதியில் விபசாரம் நடப்பதாகப் போலீசுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று நடத்திய சோதனையில் 3 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேரையும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்குக் கொண்டு செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று 3 பேரின் பெற்றோர் நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையே நீதிமன்றம் நியமித்த ஒரு சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில், பிடிபட்ட இளம்பெண்கள் உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்த சமுதாயத்தில் விபச்சாரம் காலம் காலமாக இருந்து வரும் ஒரு சடங்கு என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி 3 பேரும் கடந்த நவம்பர் மாதம் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 3 பேரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பிருத்விராஜ் சவன், விபச்சாரம் சட்டத்தின் கண்களில் குற்றமல்ல என்று பரபரப்பு தீர்ப்பைக் கூறி 3 இளம்பெண்களையும் விடுவித்து உத்தரவிட்டார். நீதிபதி பிரித்விராஜ் தனது தீர்ப்பில் கூறி இருப்பது: இந்தியாவில் வயதுக்கு வந்த ஒரு பெண் அவருக்கு விருப்பப்பட்ட எந்த தொழிலையும் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு. எனவே யாரையும் அவர்களது அனுமதி இல்லாமல் கஸ்டடியில் வைத்திருக்க முடியாது.1956ல் விபச்சார தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அது விபச்சாரத்தை ஒழிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமல்ல.
விபசாரத்தில் ஈடுபட்டார் என்ற ஒரு காரணத்திற்காக இந்த சட்டத்தின்படி யாரையும் தண்டிக்க முடியாது. பொது இடங்களில் வணிக நோக்கில் ஒருவரை விபச்சாரத்திற்குத் தூண்டுவது, துஷ்பிரயோகம் செய்வது, ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்துவது உட்படக் குற்றங்களுக்கு மட்டும்தான் இந்த சட்டத்தின்படி தண்டனை கொடுக்க முடியும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பிரித்விராஜ் சவனின் இந்த அதிரடி உத்தரவு வரும் நாட்களில் இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.