மனைவி மீது சந்தேகம் 40 நாளே ஆன பிஞ்சுக் குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற கொடூரம்..!
திருவனந்தபுரத்தில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 40 நாளே ஆன பிஞ்சு பெண் குழந்தையை வாலிபர் ஆற்றில் வீசிக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் திருவல்லம் அருகே உள்ள பாச்சல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன் (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு என்ற இடத்தை சேர்ந்த சிந்து என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் ஒரு சில மாதங்கள் மட்டும் தான் இவர்களுக்கிடையே மகிழ்ச்சி இருந்தது. மனைவி மீது எப்போதும் உன்னிகிருஷ்ணனுக்குச் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.இதற்கிடையே சிந்து கர்ப்பிணியானார். இதன் பின்னரும் நாளுக்கு நாள் தகராறு அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் சிந்துவுக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 40 ஆவது நாளான நேற்று சிந்துவின் வீட்டில் வைத்து குழந்தைக்கு நூல் கட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உண்ணிகிருஷ்ணனும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் குழந்தையைத் தனது தாயிடம் காண்பித்து வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகமடைந்த சிந்து இது குறித்து திருவல்லம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் உண்ணிகிருஷ்ணனை பிடித்து விசாரித்த போது குழந்தையை அவர் அங்குள்ள ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று ஆற்றில் தேடினர். ஆனால் அந்த குழந்தையைச் சடலமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து உண்ணிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தான் குழந்தையைக் கொன்றதாக அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார். 40 நாள் மட்டுமே ஆன பிஞ்சுக் குழந்தையை தந்தையே ஆற்றில் வீசி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.