எஸ்பிபி நமக்குள் ஒருவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம்..!

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தை மலையாளிகள் தங்களுக்குள் ஒருவராகத் தான் கருதினர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது இசை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் மருத்துவமனையில் இருக்கும்போது உடல் நலம்பெற வேண்டி மத வேறுபாடின்றி அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தினர். ஆனால் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தி விட்டு எஸ்பிபி மறைந்துவிட்டார்.

எஸ் பி பாலசுப்ரமணியம் மலையாளத்தில் அதிகமாகப் பாடாவிட்டாலும் கேரளாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. கேரளாவில் எங்கு இவரது கச்சேரி நடந்தாலும் அதற்கு டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமம். அந்த அளவிற்கு ரசிகர்கள் அவரது பாடல்களைக் கேட்கக் குவிந்து விடுவார்கள்.

இந்நிலையில் எஸ்பிபியின் மறைவுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பது: சங்கராபரணத்தில் 'சங்கரா நாதசரீரா பரா' என்று தொடங்கும் பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவரை கேட்காத கம்பீரமான அந்தக் குரல் ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அன்று முதல் எஸ்பிபி மலையாள ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்படப் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் பாடியுள்ளார்.

ஒவ்வொரு பாடலிலும் அவர் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளார். மலையாளிகளைப் பொருத்தவரை எஸ்பிபியை வேற்று மொழியைச் சேர்ந்தவராகவோ, வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராகவோ இதுவரை கருதியதில்லை. அவரை தங்களுக்குள் ஒருவராகத் தான் மலையாளிகள் கருதுகின்றனர். இந்தியச் சங்கீத உலகத்திற்கு எஸ்பிபி யின் மறைவு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் சார்பிலும், மலையாளிகள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

More News >>