கடத்திக் கொண்டு வந்த காதலிக்கு தாலி கட்ட செயின் பறித்த வாலிபர்
பெற்றோர் வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்த காதலிக்கு தாலி கட்டுவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்தது. திருச்சூர் பாறேக்காவு என்ற இடத்தை சேர்ந்தவர் ஆஷிக் (24). இவரது நண்பர் தனிஷ் (32). ஆஷிக் பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். ஆனால் அந்தக் காதலுக்கு இளம்பெண்ணின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் அந்தப் பெண்ணை அவரது பெற்றோருக்குத் தெரியாமல் ஆஷிக் கடத்திச் சென்றார். பின்னர் திருச்சூரில் வாடகைக்கு ஒரு வீடு பிடித்து அங்குக் காதலியை அவர் தங்க வைத்திருந்தார்.தன்னை தாலிகட்டி உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆஷிக்கிடம் அவரது காதலி வற்புறுத்தினார். ஆனால் தாலி வாங்குவதற்கோ திருமணத்திற்கோ அவரிடம் பணம் ஏதும் இல்லை. இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட ஆஷிக் தீர்மானித்தார். இதன்படி தனது நண்பர் தனிஷை அழைத்துக் கொண்டு பைக்கில் சென்ற ஆஷிக், ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரின் செயினை பறித்துத் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்ததில் செயின் பறிப்பில் ஈடுபட்டது ஆஷிக் எனத் தெரிய வந்தது. இதையடுத்து ஆஷிக்கையும், தனிஷையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தான் காதலிக்குத் தாலி கட்டுவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. தற்போது இவர்கள் இருவரும் திருச்சூர் சிறையில் உள்ளனர்.