தொடர் தோல்விகளால் கடுப்பாகி போன கேப்டன் கூல் !
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (25-09-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற கேப்டன் கூல் பந்து வீச்சைத் தேர்வு செய்து , டெல்லியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த சீசனின் மோசமான பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணியாகச் சென்னை நிகழும்போது , நீங்களே பேட்டிங் செய்து இருக்கலாம் தோனி. சாம் கரணை தவிர் வேறு யாரும் சிறப்பாகப் பந்து வீசவில்லை .
தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய டெல்லி அணியின் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஜோடி எந்தவித அழுத்தமும் இல்லாமல் மிக இயல்பாக இன்னிங்க்ஸை ஆடினர். அந்த அளவிற்குப் பந்து வீசினார்கள் சென்னை அணியினர்.முதல் ஓவரை வீசிய தீபக் சஹரின் இரண்டாவது பந்து லேசாக பேட்டில் பட்டுள்ளது. ஆனால் இதனைச் சென்னை அணியின் கேப்டனும் , கீப்பர் ஜாம்பவானான தோனியும் ( என்ன சிம்ரன் இதெல்லாம் ), பவுலிங் வீசிய சஹரும் கவனிக்கவே இல்லை.
இதன்பின்னர் டெல்லி அணியின் போக்கே மாறியது. பின்னர் ஷா முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசி அவர் பங்கிற்குச் சென்னையைப் பங்கம் செய்யத் தொடங்கினார்.இதுவரை 18 இன்னிங்சில் தொடக்க இணையாக ஆடிய தவான் - ஷா ஜோடி இந்த சீசனின் முதல் 50 ரன்னை இணையாகக் கடந்தனர்.
"ஏம்பா தோனி ! நீ தான் , வித்தியாசமா யோசிப்பயே ! அப்புறம் ஏன் ? இன்னும் முரளி விஜய் , ஜடேஜா வை டீம் ல வச்சிருக்க " என்று சென்னை ரசிகர்களே புலம்பிக்கொண்டு இருக்கின்றனர். மூன்று ஆட்டங்களில் எதிரணிக்கு சாதகமாகவே , சிறப்பாகச் செயல்படும் முரளி விஜய் தேவையா ? இரண்டு போட்டிகளிலும் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வழங்கும் "வள்ளல்" பவுலர் ஜடேஜா தேவையா ? என்ற கேள்விகளுக்கு தோனியிடமே பதிலிருக்காது. ஜடேஜாவுக்கு பதில் இம்ரான் தாஹிரை பயன்படுத்தி இருக்கலாம்.
முதல் பத்து ஓவர் வரை விக்கெட் இல்லாமல் டெல்லியை ஆட வைத்த காரணத்திற்காக வேண்டுமானால் சென்னையைப் பாராட்டலாம். அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்க, எப்படியோ இரண்டு விக்கெட்டை தன்வசப்படுத்திக் கொண்டார் சாவ்லா.சென்னை அணியைப் பொறுத்தவரை சாம் கரண் மட்டுமே சிறப்பாகப் பந்து வீசினார். அவர் 4 ஓவர்களை வீசி 27 ரன்களுக்கு ,1 விக்கெட் எடுத்தார்.
சென்னை அணிக்கு இருபது ஓவர் முடிவில் 175/4 ரன்களை அடித்து 176 அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது டெல்லி. ஓவருக்கு 8.8 என்ற ரன்ரேட் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது சென்னை அணி.
இந்த போட்டியிலும் எதிரணிக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்காமல், தொடக்க இணையாக இறங்கிய வாட்சன் மற்றும் விஜய் இருவரும் "இன்னுமாடா எங்கள நம்புற" என்று தோனிக்கு தெரிவித்துவிட்டு , பெவிலியன் திரும்பினர்.ஒருபுறம் விக்கெட் சரிந்து கொண்டே இருந்தாலும், டியூ பிளசில் மட்டும் அணிக்காகப் போராடிக் கொண்டிருந்தார் ( நீ பேசாம அமெரிக்காவுக்கு போய்டு சிவாஜி ) .
சென்னை அணியின் அனுபவ வீரர்கள் சோபிக்காத பட்சத்தில் , கெய்க்வாட் போன்ற இளம் வீரர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கடினமாகத்தான் இருக்கும். சென்னைக்காக போராடிக்கொண்டிருந்த பிளசில் 43 ( 35 பந்தில் , 4 பவுண்டரி ) 18வது ஓவரில் ஃபண்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
கடைசி ஓவரை வீசிய டெல்லி அணியின் ரபாடா ( 4-0-26-3 ) , தோனி மற்றும் ஜடேஜா இருவரையும் பெவிலியன் அனுப்பினார்.எளிதாக தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட சென்னை அணியை எந்தவித சேதாரமும் இல்லாமல் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி.
டெல்லி அணியின் ப்ரித்வி ஷா 43 பந்தில் 9 பவுண்டரி , 1 சிக்சர் என 64 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.சென்னை அணியைப் பொறுத்தவரை டியூ பிளசில் மற்றும் சாம் கரணைத் தவிர வேறு யாரும் சிறப்பாகச் செயல்படவில்லை.
இன்று IPL போட்டியில் மோத இருக்கும் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மறக்காமல் தங்களது கருத்து பிரிவில் பதிவிடுங்கள்.