ராத்திரியில் ரவுண்ட்ஸ் வரும் போலீசார் யார் ..? செல் போன் நம்பருடன் தினசரி வெளியாகிறது பட்டியல்..

தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவர். எனினும் இப்படி ரோந்து வரும் அதிகாரிகள், போலீசார் யார் என்று பொது மக்களுக்குத் தெரிவதில்லை.ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் உடனடியாக போலீசார் தொடர்பு கொள்ளக் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பிறகே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என்ற நடைமுறை இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையை மாற்றி முதன்முதலாகச் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகுதிவாரியாக ரோந்து செல்லும் போலீஸ் அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்கள் செல்போன் எண் பொதுமக்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்த நடைமுறை நல்ல பலனை அளிப்பதாக அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

இதைத்தொடர்ந்து இந்த நடைமுறையை படிப்படியாக எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது காவல்துறை.நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இவ்வாறு ரோந்து செல்லும் அதிகாரிகளின் பெயர் மற்றும் செல்போன் எண் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்கள் அந்த போலீஸ் அதிகாரியிடம் தொலைப்பேசி மூலமே புகார் செய்யலாம். இதன் மூலம் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்க வசதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.விரைவில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வர இருப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

More News >>