குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. இந்த வருஷம் மாறுவேஷம் மாயமாகும் ..
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசராவுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் இருக்கிறது குலசேகரன் பட்டினம். - ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் சுயம்பு வடிவாய் -சிவசக்தி சமேதராய் குடிகொண்டிருக்கிறாள்.
இக்கோவிலில் தசரா பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு கடவுளின் வேடங்களை அணிந்த படி வீதி உலாவாகச் செல்வர். காளி, ஆஞ்சநேயர், சிவன், முருகன்,விநாயகன் என பல்வேறு கடவுளைப் போலப் பக்தர்கள் வேடம் புனைந்து வருவது வேறு எங்குமே இல்லாத சிறப்பு.இப்படி வேடம் புனையும் பக்தர்கள் வேண்டுதலுக்கான நேர்த்திக் கடனைத் தீர்க்கவே இப்படி வருகிறார்கள்.
பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படும் தசரா பண்டிகையில் கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர்.மைசூரில் நடக்கும் பிரம்மாண்டமான தசரா விழாவை அடுத்து மிகப்பெரிய தசரா விழா இதுதான். திருச்செந்தூரில் நடக்கும் கந்த சஷ்டி திருவிழாவைவிட அதிக அளவு பக்தர்கள் இந்த விழாவிற்கு வருகிறார்கள்.பத்தாம் நாள் இரவு அம்மன், மகிசனை சம்ஹாராம் செய்கிறாள். அம்மன் பத்துநாட்களும், ஒவ்வொரு அம்மனாக மக்களுக்குக் காட்சியளித்து இறுதியில் முத்தாரம்மனாக விஸ்வரூபம் எடுத்து அசுரனைச் சூரசம்ஹாரம் செய்வதுதான் இந்த குலசை தசரா திருவிழா.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருவிழாவிற்கு கொரானா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அடுத்த மாதம்17 ஆம் தேதி நடைபெறும் கொடியேற்ற வைபவத்தில் கலந்து கொள்ளப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.அதேபோல் 10 மற்றும் 11 நாளில் நடக்கும் திருவிழாவின் போதும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
நாள் தோறும் சுவாமி புறப்பாடு கோவில் உட்பிரகாரத்தில் மட்டும் வைத்து நடைபெறும். அபிஷேக நிகழ்ச்சிகளைக் காணப் பக்தர்களுக்கும் கட்டளைதாரர்களுக்கும் அனுமதி கிடையாதுதிருவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை யூடியூப் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும்.30 ம் தேதிக்குப் பின்னர் தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்படும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தளர்வுகளின் படி அடுத்த கட்ட முடிவு மக்களுக்கு அறிவிக்கப்படும் என குலசேகரன்பட்டினம் தசரா விழா தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சிலர் காப்புக் கட்டி விரதத்தைத் துவக்கியுள்ளனர். எப்படியும் திருவிழாவை நடத்த அம்மன் அருள் புரிவார் என்பது அவர்களது அசாத்திய நம்பிக்கை.