ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்குக் கடத்திய 300கிலோ கஞ்சா சிக்கியது.. 7 பேர் கைது.
ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 300 கிலோ கஞ்சா பார்சல்களை திண்டுக்கல் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்தனர்.ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்குக் கஞ்சா பார்சல்களை சிலர் தக்காளி ஏற்றிச் சென்ற வாகனத்தில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வடமதுரை தங்கம்மாபட்டி சோதனைச் சாவடியில் போலீசார் காத்திருந்து அந்த வழியாக வந்த சரக்கு வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்தனர். ஒரு சரக்கு வண்டியில் தக்காளி கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பெட்டிகள் காலியாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு அடியில் சில பார்சல்கள் இருந்தன. அவற்றை போலீசார் பிரித்துப் பார்த்த போது, 200 கிலோ கஞ்சா இருந்தது.
இதையடுத்து, போலீசார் அவற்றைப் பறிமுதல் செய்து, வாகனத்தில் வந்தவர்களைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே கடத்திய 100 கிலோ கஞ்சா கடத்தி வந்துள்ளது தெரிய வந்தது.திண்டுக்கல் சீலப்பாடி அருகே ஒரு வீட்டில் அந்த 100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது. அதையும் பறிமுதல் செய்த போலீசார், இந்த கடத்தல் தொடர்பாகத் திண்டுக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(28), சோணை முத்து(31) பரணி(33) யுவராஜ்(33) ராகவன்(29) பண்டியப்பன்(52), ஜெய்சங்கர்(29) ஆகிய 7 பேரைக் கைது செய்தனர்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரத்தில் ஒரு வீட்டில் 80 கிலோ கஞ்சா பிடிபட்டது. கொரானோ ஊரடங்கால் வேலை இழந்த சிலர் தற்போது ஆந்திராவில் இருந்து திண்டுக்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்குக் கஞ்சா கடத்தி வருவதாகவும், அந்த கும்பலைக் கைது செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.