நாடு முழுவதும் 7 கோடி கொரோனா பரிசோதனை.. ஐசிஎம்ஆர் தகவல்..
நாட்டில் இது வரை 7 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் தினமும் 85 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்து வருகிறது. நோய் பாதித்தவர் எண்ணிக்கை 57 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இவர்களில் 47 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 10 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இது வரை 91,149 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரிசோதனைகளைத் தினந்தோறும் அதிகரித்து வருவதாகவும், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக உள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர் தெரிவித்திருக்கிறது. இதனால் உலக அளவில் குணம் அடைவோர் விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஐ.சி.எம்.ஆர். இன்று(செப்.26) வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் இது வரை 7 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 975 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டுமே 13 லட்சத்து 41 ஆயிரத்து 535 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இது வரை 67 லட்சத்து 1677 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் மட்டுமே 93 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.