மெக்சிகோவில் ஓடையில் கிடைத்த ஆளுயர எலியால் பரபரப்பு..!

மெக்சிகோவில் ஓடையைத் துப்பரவு செய்யும் போது கிடைத்த ஆளுயர எலியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஒரு பொம்மை எனப் பின்னர் தான் தெரிய வந்தது.மெக்சிகோவில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரிலுள்ள பல ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அடைப்புகளைச் சரி செய்யும் பணியில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு ஓடையில் தண்ணீர் செல்வது முற்றிலும் தடைப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதிக்குத் தொழிலாளர்கள் சென்று ஓடைக்குள் இறங்கிப் பார்த்தனர்.

அப்போது ஓடைக்குள் ஒரு இடத்தில் ஒரு ஆள் உயரத்தில் எலியைப் போன்ற ஒரு உருவம் சிக்கியிருந்தது தெரியவந்தது. அதைப்பார்த்த தொழிலாளர்கள் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். இவ்வளவு பெரிய எலியா எனத் திகைத்த தொழிலாளர்கள் அருகில் சென்று பார்த்தபோது தான் அது உண்மையான எலி அல்ல என்றும், எலி வடிவில் தயாரிக்கப்பட்ட ஒரு பொம்மை என்றும் தெரியவந்தது.

மெக்சிகோ நகரில் வருடந்தோறும் ஹாலோவீன் நிகழ்ச்சி நடத்தப்படுவது உண்டு. இதில் பெரிய பெரிய சைஸ்களில் பலவித உருவங்களுடன் கூடிய பொம்மைகள் இடம் பெறும். இந்த எலி பொம்மையும் ஹாலோவீன் நிகழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். இதையடுத்து தொழிலாளர்கள் அந்த எலி பொம்மையை மிகவும் சிரமப்பட்டு வெளியே கொண்டு வந்து சுத்தம் செய்தனர். இந்த காட்சியைச் சிலர் வீடியோ எடுத்து சிலர் சமூக இணையதளங்களில் வெளியிட்டனர். இது தற்போது சமூக இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதன் பின்னர் தான் அந்த எலி பொம்மையின் உரிமையாளர் யார் எனத் தெரியவந்தது. மெக்சிகோவைச் சேர்ந்த எவிலின் லோப்பஸ் என்பவர், அந்த எலி பொம்மை தன்னுடையது தான் எனக் கூறியுள்ளார். ஹாலோவீன் நிகழ்ச்சிக்காக அலங்காரத்திற்காக அந்த எலி பொம்மையைத் தான் உருவாக்கியதாகவும், சமீபத்தில் பெய்த கனமழையால் அந்த பொம்மை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்றும் அவர் கூறினார். அந்த எலி பொம்மை ஓடையில் சிக்கியது தனக்குத் தெரியும் என்றும் அதை வெளியே எடுக்கப் பலரிடம் உதவி கேட்டும் யாரும் உதவி செய்யவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

More News >>