இரண்டு முறை கொரோனா பாசிட்டிவ், 3 மாதங்களுக்கு மேலாக தனிமை.. கேரள வாலிபரின் வேதனை..

கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு 2 முறை கொரோனா பாசிட்டிவ் ஆனதால் 5 வருடங்களுக்குப் பின் தனக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளைக் கூட பார்க்க முடியாமல் 3 மாதங்களுக்கு மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பொன்னூக்கரை என்ற பகுதியைச் சேர்ந்தவர் சாவியோ ஜோசப் (35). இவர் ஓமன் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார்.

இந்நிலையில் அவருடன் ஒன்றாக அறையில் தங்கியிருந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்கிடையே சாவியோவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகக் குழந்தைகள் எதுவும் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் அவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இதனால் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் காரணமாகவும், அறையில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாலும் சாவியோ ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டார்.

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் சாவியோ ஊருக்குத் திரும்பினார். வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வந்தால் கேரளாவில் 2 வாரம் சுய தனிமையில் இருக்க வேண்டும். இதையடுத்து சாவியோ ஜோசப் அவருடைய வீட்டிலேயே தனிமையில் இருந்தார். இரண்டு வாரங்கள் தனிமைக் காலத்தை முடித்த பின்னர் அவர் கொரோனா பரி சோதனை நடத்துவதற்காக அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்துக்குச் சென்றார். அங்கு பரிசோதித்த போது அவருக்கு பாசிட்டிவ் எனத் தெரியவந்தது.அதிகமாக அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே மீண்டும் 2 வாரங்கள் தனிமையில் இருக்க அவரை டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து அவர் மீண்டும் தனிமைக்குச் சென்றார். இரண்டு வாரத்திற்குப் பின்னர் அவர் மீண்டும் பரிசோதனைக்குச் சென்றார். அப்போது நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை எனத் தெரிய வந்தது. ஆனாலும் 2 வாரம் தனிமையிலிருந்த பின்னரே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.மூன்றாவது முறையாகத் தனிமையில் இருந்த பின்னர் நடத்திய பரிசோதனையில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இது டாக்டர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தொடர்ந்து அவரை வீட்டிலேயே தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். இப்படி கடந்த ஜூன் மாதம் முதல் இன்று வரை சாவியோ வீட்டிலேயே தான் முடங்கிக் கிடக்கிறார். வீட்டை விட்டு வெளியே செல்லாத தனக்கு எப்படி 2 முறை கொரோனா பாசிட்டிவ் ஆனது என இவருக்குத் தெரியவில்லை. இதன் காரணமாக தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளையும் பார்க்கச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் சாவியோவுக்கு அடுத்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அந்த பரிசோதனையிலாவது தனக்கு நெகட்டிவ் ஆகுமா என்ற எதிர்பார்ப்புடன் சாவியோ இருக்கிறார்.

More News >>