அரைசதம் அடித்த பிரித்வி ஷா பூஜ்ஜியத்திலேயே அவுட்டாகி விட்டார்...!
நேற்று சென்னையுடன் நடந்த போட்டியில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் இருந்தபோதே அவுட் ஆகி விட்டார். அவரது பேட்டில் உரசிய பந்தைப் பிடித்த தோனிக்கு கூட அது தெரியாது என்பதுதான் அதில் வேடிக்கையானது ஆகும்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னையின் சோகம் தொடர்கிறது. நேற்று டெல்லியுடன் நடந்த இரண்டாவது போட்டியிலும் சென்னை 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெல்லி அணியின் வெற்றிக்கு இளம் வீரர் பிரித்வி ஷாவின் அதிரடி ஆட்டம் தான் காரணமாக அமைந்தது. நேற்றைய போட்டியில் இவர் 43 பந்துகளைச் சந்தித்து 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் உதவியுடன் 64 ரன்களை குவித்தார்.
ஆனால் இவர், தான் சந்தித்த முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தபோதே அவுட்டாகி விட்டார் என்பது பின்னர் தான் தெரியவந்தது.தீபக் சாஹர் வீசிய இரண்டாவது பந்தை பிரித்வி ஷா தட்டிவிட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் லேசாக உரசி நேராக தோனியின் கைகளுக்குச் சென்றது. பேட்டில் பந்து உரசிய சத்தம் தோனிக்கோ, மைதானத்தில் இருந்த நடுவர்களுக்கோ கேட்கவில்லை. ஆனால் பிரித்வி ஷாவுக்கும், கமெண்டரி பாக்சில் இருந்த சுனில் கவாஸ்கர் உட்பட கமெண்டேட்டர்களுக்கும் நன்றாகக் கேட்டது. தோனியும், சென்னை வீரர்களும் ஏன் அப்பீல் கேட்கவில்லை என்று சுனில் கவாஸ்கர் உட்பட கமெண்டேட்டர்கள் ஆச்சரியப்பட்டனர்.
சில பேட்ஸ்மேன்களுக்கு பந்து பேட்டில் உரசியது தெரிந்தால் உடனே சந்தேகத்துடன் பின்னால் திரும்பி விக்கெட் கீப்பரை பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் பந்து பேட்டில் பட்டிருக்கும் என்று விக்கெட் கீப்பருக்கு உறுதியாகத் தெரிந்து விடும். உடனே விக்கெட் கீப்பர் உட்பட அனைவரும் நடுவரிடம் அவுட் கேட்பார்கள். ஆனால் பந்து பேட்டில் உரசியது தெரிந்தும் பிரித்வி ஷா பின்னால் திரும்பிப் பார்க்கவே இல்லை. இதனால் தோனியும் பந்து பேட்டில் படவில்லை என நினைத்தார். ஆனால் தீபக் சாஹருக்கு சிறிய சந்தேகம் ஏற்பட்டது. அவர் தோனியை லேசாகத் திரும்பிப் பார்த்தார்.
ஆனால் தோனி எதுவும் சொல்லாததால் அவரும் அடுத்த பந்தை வீசச் சென்றுவிட்டார். இப்படி பூஜ்ஜியம் ரன்னில் தப்பிப்பிழைத்த பிரித்வி ஷாவினால் தான் டெல்லி வெற்றி பெற்றது. பின்னர் டிவி ரீப்ளேவில் பிரித்வி ஷாவின் பேட்டில் பந்து உரசியது நன்றாகத் தெரிந்தது. சாதாரணமாக இது போன்று தோனி கவனக்குறைவாக இருப்பதில்லை. இது எப்படி நடந்தது என்று தல ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர்.