பல்டியடித்த பாமாவுக்கு கண்டனம் தெரிவித்த சினிமா நட்சத்திரங்களுக்கு திடீர் சிக்கல்..
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் பல்டியடித்த நடிகை பாமாவுக்கு கண்டனம் தெரிவித்த நடிகைகள் ரேவதி, ரம்யா நம்பீசன் உட்பட நட்சத்திரங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரபல மலையாள நடிகை கொச்சியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை மூடப்பட்ட நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வேண்டும் என்று ஏற்கனவே பாதிக்கப்பட்ட நடிகை கோரிக்கை விடுத்திருந்தார். இதன்படி வழக்கு விசாரணையின் போது நீதிபதி, வழக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட நடிகை, சாட்சிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆகியோர் மட்டுமே நீதிமன்றத்தில் இருப்பார்கள்.மற்ற அனைவரும் நீதிமன்ற அரங்கை விட்டு வெளியேற்றப்பட்டு மூடப்பட்ட அறையில் தான் விசாரணை நடத்தப்படும். கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு விசாரணை இப்படித் தான் நடைபெற்று வருகிறது.
மேலும் விசாரணை குறித்த எந்த தகவல்களையும் பத்திரிகைகள் வெளியிடக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல நடிகை பாமா மற்றும் நடிகர் சித்திக் ஆகியோர் வாக்குமூலம் கொடுப்பதற்காக நீதிமன்றம் சென்றனர். இவர்கள் இருவரும் போலீஸ் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியை ஒட்டி நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட நடிகைக்கும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திலீப்புக்கும் இடையே மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதை தாங்கள் பார்த்ததாக நடிகை பாமாவும், சித்திக்கும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இவர்கள் இருவரும் போலீஸ் தரப்பு சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் இவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த போது தாங்கள் அந்த சம்பவத்தைப் பார்க்கவில்லை என்று கூறி பல்டியடித்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.இதுகுறித்த தகவல் வெளியானவுடன் நடிகை பாமாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகைகள் ரேவதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், டைரக்டர் ஆஷிக் அபு உள்படப் பலர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக இணையதளங்களிலும் பாமாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் நடிகை பாமாவுக்கு கண்டனம் தெரிவித்த நடிகைகள், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இருப்பதாகவும் எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்தார். மூடப்பட்ட நீதிமன்றத்தில் நடந்த தகவல் எப்படி வெளியே வந்தது என்பது குறித்தும், நடிகைக்குக் கண்டனம் தெரிவித்ததன் மூலம் அவர்கள், இனி சாட்சியமளிக்க உள்ளவர்களுக்கு மிரட்டல் விடுக்க முயற்சிப்பதாகவும் திலீப் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நடிகைகள் ரேவதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், டைரக்டர் ஆஷிக் அபு உட்பட்டோருக்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.