ஜெய்ப்பூரில் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் படக் குழு.. ஒரிசா கடற்கரையில் மணற் சிற்பம்..

பிரபல திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் நேற்று காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலைக்குச் சென்றவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு தொற்றிலிருந்து குணம் அடைந்து உடல் நிலை தேறி வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை நேற்று முன்தினம் முதல் மீண்டும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றது.நேற்று மதியம் 1.04 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று சென்னை செங்குன்றம் அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

டைரக்டர் பாரதிராஜா, நடிகர்கள் விஜய், அர்ஜூன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மறைந்த பாடகர் எஸ்பிபி க்கு அஞ்சல் செலுத்தும் விதமாகப் புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒரிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் ராதிகா, டாப்ஸி மற்றும் படக்குழுவினர் பாடகர் எஸ்.பி.பி.யின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சியான் விக்ரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,மொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரைப் பிடிக்கும். இவரது குரலின் வலம், கம்பீரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்துப் போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். S.P.B. அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

இயக்குனர் தங்கர் பச்சான் கூறும் போது,எஸ்பிபி மறைவு துயரச் செய்தியை அறிந்தேன். அதுகுறித்து பேசுவதோ எழுதுவதோ தோன்றாத மனநிலையில் இவ்வளவு நேரம் தத்தளித்தேன். எனக்குள் அவரது இசை குரல் என்னென்ன வித்தைகளைச் செய்திருக்கும்.என் வாழ்நாளில் இதுவரை எத்தனை மணி நேரங்களை இனிவரும் காலங்களில் எத்தனை மணி நேரங்களைச் செலவிட்டு இருப்பேன், இனி செலவிடுவேன் என்பதை நான் மட்டுமே அறிவேன். பின்னணி இசைக் கோர்வையை பாடல் வரிகளைக் கொண்டு அவரது இசை குரலால் காலம் கடந்து நிற்கும் பாடல்கள் மிக அரிதான பாடல்கள் எடுக்க எடுக்கத் தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போலவே இனி வரும் தலைமுறைகள் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அண்ணன் எஸ்பிபி வாழ்வார் மக்கள் மனங்களில் என்றார்.

More News >>