பெண்கள் உடல் எடையை குறைப்பது கடினம்! காரணம் தெரியுமா?

உடல் எடையைக் குறைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. மாதக்கணக்கில் தொடர்ந்து சீராக முயற்சி செய்து வந்தால் மட்டுமே ஓரளவு பலனைக் காண முடியும். உடல் எடையைக் குறைக்கவேண்டுமென்றால் முறையான வாழ்வியல் மாற்றங்களை கடைப்பிடிக்கவேண்டும். ஆனால், எவ்வளவு முயற்சித்தாலும் பெண்களுக்கு உடல் எடை அவ்வளவு எளிதில் குறைந்துவிடாது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் பெண்களை விட ஆண்களுக்கே சீக்கிரம் பலன் தெரிகிறது.

பெண்களும் எடை குறைப்பும்

உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஒரே சமயத்தில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஈடுபட்டால் பெண்ணைவிட ஆணுக்குச் சீக்கிரமாக எடை குறைவதைக் காணலாம். தொடக்கக் காலத்தில் இந்த வேறுபாடு நன்றாகவே புலப்படும். இருவரும் ஒரே வித உணவுக் கட்டுப்பாடு, ஒரேவித உடற்பயிற்சியைக் கைக்கொண்டாலும் பெண்ணை விட ஆணுக்கு உடல் எடை சீக்கிரமாகக் குறையும். பெண்களுக்கு இடுப்புப்பகுதியில் சேர்ந்திருக்கும் கூடுதல் எடையைக் குறைப்பது அதிகக் கடினம். இயற்கையாகவே ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே உள்ள மரபணு மற்றும் உயிரியல் வேறுபாடு காரணமாக உடல் எடை குறைவதிலும் மாறுபாடு காணப்படுகிறது.

தசையின் நிறை

பெண்களின் தசை திசுக்களைக் காட்டிலும் ஆணின் தசை திசுக்கள் குறைந்த நிறை கொண்டவை. நிறை குறைந்த தசை திசுக்களைக் கொண்டிருப்பதால் ஓர் ஆணால் பெண்ணைக்காட்டிலும் அதிக ஆற்றலை (கலோரி) எரிக்க முடிகிறது. அதாவது ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் உணவில் சம அளவான கலோரிகளை குறைத்தாலும் ஆணின் உடல் எடை அதிகமாகக் குறையும்.

ஹார்மோன்

பெண்ணுக்கும் ஆணுக்கும் ஹார்மோன்களில் வேறுபாடு உண்டு. எடை குறைப்பதிலும் அவை வேறுபடுகின்றன. ஆண்களுக்கு அதிக அளவு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனும் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் இருக்கும். ஆனால் பெண்களுக்கு அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் குறைந்த அளவு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனும் இருக்கும். பெண்களின் எடை குறைவதில் தாமதம் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

பெண்கள் எடை குறைவதில் தடையாக இருக்கும் இன்னுமொரு ஹார்மோன் கிரெலின் ஆகும். பசிக்குக் காரணமாகும் ஹார்மோன் இது. உடற்பயிற்சி செய்து முடித்ததும் பெண்களுக்கு கிரெலின் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது. ஆகவே, அவர்கள் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். ஆனால், ஆண்களுக்கு இந்த ஹார்மான் சமநிலை மாறுபாடு அடைவதில்லை.

உடல் கொழுப்பு

பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு உடலில் கொழுப்பு 6% முதல் 11% வரை அதிகமாகும். இந்த அதிக அளவு கொழுப்பு பேறுகாலத்தின்போது அவர்களுக்கு உதவும். பூப்படைவதிலிருந்து மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் பருவம் வரையும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குச் சராசரியாகக் கொழுப்பின் அளவு அதிகமாகும்.

பெண்கள் எடை குறைப்பது எப்படி?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள உயிரியல் வேறுபாட்டின் காரணமாக உடல் எடையைக் குறைப்பது ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றலாம். ஆனால், தொடர்ந்து முயற்சித்து வந்தால் எடை குறைப்பு சாத்தியமாகும்.

வெவ்வேறு பயிற்சிகள்

பெண்கள், எடையைக் குறைப்பதற்கு ஒரேவிதமான உடற்பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடாமல், வெவ்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். உடல் எடையைக் குறைப்பதற்கான வெவ்வேறு பயிற்சிகளைச் செய்தால் உடல் எடை சற்று சீக்கிரமாகக் குறையும்.

ஆரோக்கியமான உணவு பழக்கம்

உங்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் எந்த உணவு முறை ஏற்றதாக உள்ளது என்பதைச் சோதித்து அறிய வேண்டும். உங்கள் தோழிக்கு ஏற்றதாக இருக்கும் உணவு முறை உங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான வளர்சிதை மாற்றம் இருக்கும். ஆகவே, உடல் எடை குறைய உங்களுக்கு ஏற்ற உணவு முறையைச் சோதித்துக் கண்டுபிடிப்பது அவசியம்.

ஆரோக்கியமான வாழ்வியல் முறை

உடற்பயிற்சி செய்வதும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதும் மட்டுமே உடல் எடை குறைய உதவி செய்ய முடியாது. உடலில் கொழுப்பின் அளவை குறைத்து, எடையைக் குறைய உதவும் வாழ்வியல் முறைக்கு மாற வேண்டும். தூங்கும் நேரம், உடலியல் செயல்பாடு, அன்றாட வாழ்க்கை முறை போன்ற வாழ்வியல் முறையை மாற்றும்போது சீக்கிரமே உடல் எடை குறையும்.

More News >>