குவைத்தில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் வெளிநாட்டினர் அனைவருக்கும் வேலை பறிபோகிறது..!

குவைத்தில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் இந்தியர் உட்பட வெளிநாட்டினர் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து விட்டு அவர்களுக்குப் பதிலாக உள்ளூர் வாசிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.துபாய், குவைத், சவுதி அரேபியா உட்பட வளைகுடா நாடுகள் அனைத்திலும் பெரும்பாலான நிறுவனங்களில் ஒரு காலத்தில் இந்தியர் உட்பட வெளிநாட்டினர் தான் அதிகளவில் பணிபுரிந்து வந்தனர். பல்வேறு அரசுத் துறைகளில் கூட ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக வளைகுடா நாடுகளில் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் வெளிநாட்டினரை நீக்கிவிட்டு உள்ளூர் வாசிகள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.இதனால் வருடந்தோறும் இங்கு இந்தியர் உள்பட ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து வருகின்றனர். குவைத் நாட்டில் பொதுப்பணித் துறை மற்றும் சாலைப் பணிகள் துறையில் இந்தியர் உட்பட ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரு துறைகளிலும் பணிபுரியும் 700 வெளிநாட்டினரை படிப்படியாக டிஸ்மிஸ் செய்யக் கடந்த வருடம் குவைத் அரசு தீர்மானித்தது.

இதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் 150 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். மீதமுள்ள 550 பேரைப் பல கட்டங்களாக இந்த வருட இறுதிக்குள் டிஸ்மிஸ் செய்யத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உடனடியாக அனைவரையும் பதவி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக உடனடியாக உள்ளூர் வாசிகளை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை அமைச்சரும், வீட்டு வசதி வாரிய இணை அமைச்சருமான டாக்டர் ராணா அல் பாரிஸ் இதற்கான உத்தரவில் உடன் கையெழுத்திடுவார் என அரபு டைம்ஸ் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>