பாடகருக்கு பதில் பாராளுமன்ற உறுப்பினர்.. எஸ்பிபி க்கு இரங்கல் பேட்டியில் அதிர வைத்த அமைச்சர்..!
திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிருபர்கள், செல்லூர் ராஜுவிடம் மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் குறித்து கருத்துக் கேட்டனர்.
ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ தவறுதலாக,அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் குறித்து பதில் கூற துவங்கினார். அவர் "ஜெயலலிதாவின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர். தங்கமான மனிதர்" என்று கூறினார். இதைக் கேட்டு நிருபர்களுக்கு கடும் அதிர்ச்சி.அருகிலிருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அண்ணே அவங்க சினிமா பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் இன்னைக்கு இறந்து போய்விட்டாருல்ல.. அவரை பற்றி கேட்கிறாங்க என்று எடுத்துக் கொடுத்தார் .
அதை அடுத்துச் சுதாரித்துக்கொண்ட, செல்லூர் ராஜூ, "எம்ஜிஆரின் அடிமைப்பெண் படத்தில் பாடல் பாடி அதன்மூலம் தொழில் அவரது குரல் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது. இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். அவரது இறப்பு, சினிமா ரசிகர்களுக்கு இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு" என்று சொல்லிச் சமாளித்து விட்டு பேட்டியை முடித்துக் கொண்டார்.இப்போதெல்லாம் செல்லூர் ராஜு பேட்டி என்றாலே கலக்கல் காமெடி என்று செய்தியாளர்கள் நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள்..