சுற்றிலும் காட்டு யானைக் கூட்டம், தப்பிப்பதற்கு விவசாயி என்ன செய்தார் தெரியுமா?
மூணாறு அருகே நள்ளிரவில் தன் முன்னே வந்து நின்ற காட்டு யானைக் கூட்டத்திடமிருந்து இருந்து தப்பிக்க விவசாயி கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.மூணாறு வட்டவடா அருகே உள்ள பழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (46). வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் இவருக்கு விவசாய நிலம் உள்ளது. யானைகள் உட்பட விலங்குகள் பயிர்களை நாசம் செய்யாமல் இருப்பதற்காக இவர் இரவில் தன்னுடைய நிலத்திற்கு அருகே அமைக்கப்பட்ட பண்ணை கொட்டகையில் தங்குவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று இரவு ஜேம்ஸ் வழக்கம் போலப் பண்ணை கொட்டகையில் தங்கியிருந்தார். இந்த கொட்டகை ஓலைகள் மற்றும் தகர ஷீட்டுகளால் அமைக்கப்பட்டதாகும். நள்ளிரவு வரை விழித்திருந்து விலங்குகள் வருகிறதா எனக் கண்காணித்த பின்னர் ஜேம்ஸ் தூங்கச் சென்றார். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது கூரையின் ஒரு பகுதி திடீரென ஜேம்ஸ் மீது விழுந்தது. திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது அவர் கண்முன்னே ஏராளமான காட்டு யானைக் கூட்டம் பிளிறியபடி நின்று கொண்டிருந்தது. யானைகளிடமிருந்து இருந்து தப்பிக்க அவர் வெளியே ஓட முயற்சித்தார். ஆனால் யானைக் கூட்டம் அவரை விடவில்லை.
இதையடுத்து என்ன செய்வது என யோசித்த ஜேம்ஸ், உடனடியாக அங்கிருந்த கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டார். ஆனாலும் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை உள்ளே புகுந்து கட்டிலுக்கு அடியில் தனது தும்பிக்கையால் துளாவியது. இதைப் பார்த்துப் பயந்த ஜேம்ஸ் மூச்சை அடக்கிக் கொண்டு கட்டிலுக்கு அடியிலேயே சுருண்டு படுத்துக் கொண்டார். பல மணி நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த அந்த யானைக் கூட்டம் ஜேம்சின் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியது.விடிந்த பின்னரும் அந்த காட்டு யானைக் கூட்டம் அங்கிருந்து செல்லவில்லை.
வழக்கமாக அதிகாலையிலேயே ஜேம்ஸ் வீட்டுக்குத் திரும்பி விடுவார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் ஜேம்சை தேடிச் சென்றனர். அப்போது காட்டு யானைக் கூட்டம் அங்கு நின்று கொண்டு இருப்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் கொட்டகையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து அனைவரும் சேர்ந்து வெடி போட்டு யானைகளை விரட்டினர். அந்த கொட்டகை முழுவதும் சேதப்படுத்தப் பட்டிருந்ததால் ஜேம்சை யானைகள் மிதித்துக் கொன்றிருக்கும் என்றே அனைவரும் கருதினர். ஆனால் தேடிப் பார்த்தபோது அவர் கட்டிலுக்கு அடியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பத்திரமாக மீட்டனர்.