தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்தமிழ்நாட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக திருமயம் (புதுக்கோட்டை) 10 செ.மீ மழையும், தேவகோட்டை (சிவகங்கை) 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு (செப்டம்பர் 26) 11:30 மணி வரை தென் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலைகள் 1.8 முதல் 2.8 மீட்டர் வரை எழும்பக்கூடும் எனவும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

More News >>