கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகத்தை நெருங்கும் கேரளா..!
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா மெல்ல மெல்லத் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இன்று முதன்முதலாகக் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவிலுள்ள வுஹானில் படித்த கேரளாவைச் சேர்ந்த 3 மாணவர்களுக்கு இந்த நோய் பரவியது.
இதன் பின்னர் கேரள சுகாதாரத் துறையின் தீவிர நடவடிக்கையால் நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு கட்டுக்குள் இருந்தது. ஆனால் பின்னர் இத்தாலியில் இருந்து திரும்பி வந்த ஒரு குடும்பத்தினரால் மீண்டும் கேரளாவில் நோய் பரவ தொடங்கியது. முதலில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 100க்குள் மட்டுமே இருந்தது.
பின்னர் மெல்ல மெல்ல இந்த எண்ணிக்கை உயரத் தொடங்கியது. கடந்த வாரம் தான் முதன்முதலாக நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியது. ஒரு சில நாட்களிலேயே 6 ஆயிரத்தையும், இன்று 7 ஆயிரத்தையும் தாண்டி விட்டது. இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7006 ஆகும். முதன் முதலாகத் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது இந்த மாவட்டத்தில் இன்று 1050 பேருக்கு நோய் பரவியுள்ளது.இந்தியாவிலேயே கொரோனா பரவலின் தொடக்கக் கட்டத்தில் கேரளாவில் தான் நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கேரளாவில் மேற்கொண்டுவரும் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூட தெரிவித்திருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்களைப் போலவே கேரளாவிலும் நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் கேரளாவில் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் நோய் அறிகுறி இல்லாத நோயாளிகள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும் எனக் கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.