ஸ்பெயினில் ஒயின் தொழிற்சாலையில் லீக் 50,000 லிட்டர் ஒயின் வீணானது

ஸ்பெயினில் ஒரு ஒயின் தொழிற்சாலை டேங்கில் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து 50 ஆயிரம் லிட்டர் ஒயின் வீணானது.ஸ்பெயின் நாட்டில் ஏராளமான ஒயின் தொழிற்சாலைகள் உள்ளன. தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள அல்பாசெட் என்ற இடத்தில் ஒரு ஒயின் தொழிற்சாலை உள்ளது. தற்போது திராட்சை அறுவடை காலம் என்பதால் இந்த தொழிற்சாலையில் இரவு பகலாக ஒயின் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. தயாரிக்கப்படும் ஒயினை சேகரித்து வைப்பதற்காக அந்த தொழிற்சாலையில் ஏராளமான டேங்குகள் உள்ளன. ஒயின் தயாரிக்கப்பட்டு உடனுக்குடன் இந்த டேங்கில் நிரப்பப்படும்.இந்நிலையில் நேற்று இதில் ஒரு டேங்கில் கசிவு ஏற்பட்டது. நிமிட நேரத்திற்குள் அந்த டேங்கில் இருந்து ஒயின் வெளியேறத் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே ஒயின் ஆறாக ஓடியது. இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து அப்பகுதியினர் அங்கு விரைந்து சென்று தங்களுக்கு முடிந்த அளவுக்கு ஒயினை பாட்டில்களில் சேகரித்து வீட்டுக்குகொண்டு சென்றனர். 50 ஆயிரம் லிட்டர் வரை ஒயின் வீணாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒயின் ஆறாக ஓடும் அந்த காட்சியை அப்பகுதியினர் வீடியோ எடுத்து சமூக இணையங்களில் பகிர்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தொழிற்சாலையில் இருந்து ஒயின் இப்படி கசிவது ஒரு புதிய சம்பவம் அல்ல. கடந்த ஜனவரி மாதம் கலிபோர்னியாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து சுமார் 3,67,000 லிட்டர் ஒயின் இதுபோல கசிந்து வீணானது. இரண்டு வருடங்களுக்கு முன் இத்தாலியிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>