லுடோவில் என்னை ஏமாற்றி தோற்கடித்து விட்டார் இந்த அப்பா எனக்கு வேண்டாம் நீதிமன்றத்தில் மகள் வழக்கு

லுடோ விளையாட்டில் தன்னை ஏமாற்றி தோற்கடித்த அப்பா தனக்கு தேவையில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீதிமன்றங்களில் அவ்வப்போது சில விசித்திரமான வழக்குகள் வருவது உண்டு. சாதாரணமாக கணவன் கொடுமைப் படுத்துவதாக கூறித் தான் விவாகரத்து வழக்குகள் தொடரப்படுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் தன்னிடம் கணவன் மிகவும் அன்பாக நடந்து கொள்வதாகவும், சண்டை போடுவதற்கு ஒரு வாய்ப்பு கூட தராததால் மன உளைச்சலாக இருப்பதாகவும், எனவே தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கூறி ஒரு இளம் பெண் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு இளம்பெண், தன்னை லுடோ விளையாட்டில் அப்பா ஏமாற்றி தோற்கடித்ததால் தனக்கு இனி அப்பா தேவையில்லை என்று கூறி நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். போபால் குடும்பநல நீதிமன்றத்தில் தான் அந்த இளம் பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த இளம் பெண்ணுக்கு வயது 24.அவர் தனது மனுவில் கூறியிருப்பது: நான் எனது தந்தை மற்றும் சகோதரர்களுடன் லுடோ விளையாடிக் கொண்டிருந்தேன்.

எனது தந்தை மீது எனக்கு எப்போதுமே மிகுந்த பாசம் உண்டு. ஆனால் அன்றைய விளையாட்டின் போது என்னை அவர் ஏமாற்றி தோற்கடித்து விட்டார். நான் விளையாட்டில் தோற்றது குறித்து பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் என்னை அப்பா ஏமாற்றி தோற்கடித்ததை த் தான் என்னால் தாங்கமுடியவில்லை. இதன் மூலம் எனது அப்பாவிடம் எனக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. என்னை அவர் இப்படி ஏமாற்றுவார் என கனவிலும் கூட நான் நினைத்துப் பார்க்க வில்லை. அந்த அளவுக்கு நான் என்னுடைய அப்பா மீது அன்பு செலுத்தினேன். உலகத்தில் எல்லா சந்தோஷத்தையும் எனக்கு தருவதாக வாக்களித்த அப்பாவிடமிருந்து இப்படி ஒரு செயலை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்காக அவர் போட்டியில் தோற்பது போல விட்டுக் கொடுத்திருந்தால் எனக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. எனவே எனது அப்பாவுடனான அனைத்து உறவுகளையும் நான் முறித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அந்த இளம்பெண் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

போபாலை சேர்ந்த சரிதா என்ற வழக்கறிஞர் மூலம் தான் அந்த இளம் பெண் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த இளம்பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிட்டது. இரண்டு முறை கவுன்சலிங் நடத்திய பின்னர் அந்த இளம்பெண்ணின் முடிவில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சரிதா கூறினார்.

More News >>