கமலின் நண்பனாய், குருவாய் மாறுவேடம் பூண்டு வந்த காமெடி நடிகர்..
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு திரையுலகில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். சிலர் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். மறைந்த நடிகர் நாகேஷ், டெல்லி கணேஷ், மறைந்த நடிகர் கிரேசி மோகன், ரமேஷ் அரவிந்த், சந்தானபாரதி என சிலர் அந்த பட்டியலில் உள்ளனர். அந்த பட்டியலில் முதலிடம் பிடித்துக்கொண்டவர் நாகேஷ். எப்போதும் நாகேஷ் மீது கமல் பெரும் மரியாதை காட்டுவார். அதுபோல் நாகேஷும் கமல் மீது மாறாத அன்பு காட்டுவார். நீங்கள் பிணமாக நடிக்க வேண்டும் என்று கமல் கேட்டாலும் அதை மறுக்காமல் செய்தவர் நாகேஷ். மகளிர் மட்டும் படத்தில் பிணமாக நடித்தாலும் அந்த பிணத்தை நிற்கவைத்து கீழே தூக்கிபோடு மிதித்தாலும் நடிப்பிலிருந்து அணுவும் பிசக மாட்டார் நாகேஷ்.
1959ம் ஆண்டு தாமரை குளம் என்ற படத்தில் துணை நடிகராக நடித்தார் நாகேஷ். எம்ஜிஆர். சிவாஜி, ரஜினி, கமல் என அவர் இணைந்து நடிக்காத நடிகர்களே இல்லை எனலாம். 1000 படங்களில் அவர் நடித்திருக்கிறார். நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம் போன்ற சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் நாகேஷ். இன்று செப்டம்பர் 27 ம் தேதி நாகேஷ் பிறந்ததினம். 2009ம் ஆண்டு ஜனவர் 31ம் அவர் இறந்தார். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகள் போல் நாகேஷ் மறைந்து வருடங்கள் பல உருண்டோடிவிட்டாலும் அவரது ரசிகர்கள் மறக்காமல் நெட்டில் அவருக்கு வாழ்த்துக்கள் பொழிந்து வருகின்றனர்.
நாகேஷின் தலையாய ரசிகர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நாகேஷுக்காக பகிர்ந்துக்கொண்ட மெசேஜில், நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர்.என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார் என தெரிவித்திருக்கிறார்.கமலின் இந்த உருக்கமான மெசேஞ் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.