பாஜகவில் சேரப்போகும் முன்னணி தமிழ் நடிகை..

தமிழ்நாட்டில் ஒரு தேசிய கட்சியில் இருக்கும் முன்னணி தமிழ் நடிகை இன்னும் ஒருசில தினங்களில் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பீகார் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்த வருடம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எந்த மாநிலத்திலும் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு கிடையாது. இதையடுத்து இந்த மாநிலங்களில் கட்சியை வளர்க்க பாஜக அதிரடி திட்டங்களை தயாரித்து வருகிறது. இதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரபலமான ஆட்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் காலூன்ற பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. கேரளாவில் முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்பியான அப்துல்லா குட்டிக்கு தேசிய துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர் முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி ஆக இருந்தார். பின்னர் அங்கிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இவர் எம்எல்ஏ ஆனார். இதன் பின்னர் அங்கிருந்தும் விலகி கடந்த வருடம் பாஜகவில் இணைந்தார்.கேரளாவில் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் அப்துல்லா குட்டிக்கு தேசிய அளவில் கட்சியில் உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதேபோல தமிழ்நாட்டிலும் கட்சியை வளர்க்க பாஜக பல்வேறு அதிரடி திட்டங்களை திரைமறைவில் தயாரித்து வருகிறது.

இதன்படி ஒரு தேசிய கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு முன்னணி நடிகையை தங்கள் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டது. இந்த திட்டம் கிட்டத்தட்ட வெற்றியடைந்து விட்டதாகவே கூறப்படுகிறது. இன்னும் ஒருசில தினங்களில் அந்த நடிகை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News >>