சினிமா தியேட்டர்கள் திறக்கலாம்.. மேற்கு வங்க முதல்வர் மம்தா சிக்னல்

மேற்குவங்க மாநிலத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பொழுதுபோக்கிற்கான இசை நிகழ்ச்சிகள், மேஜிக், மற்றும் சினிமா அரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகத் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால் திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர்கள், எனப் பலருக்கும் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல திரைப்படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு வருகின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.திரையரங்குகளை விரைந்து திறக்குமாறு இந்திய மல்டிப்ளக்ஸ் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தன. இதற்கான அறிக்கைகளை நாடு முழுவதுமுள்ள நாளிதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வந்தனர்.அக்டோபர் 1ம் தேதி முதல் மேற்கு வங்காளத்தில் பொழுது போக்கிற்கான இசை - நடன நிகழ்ச்சிகள், திரையரங்குகள் ஆகியன திறக்கப்பட உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இயல்பு நிலைக்குத் திரும்பும் நோக்கில், வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள், நாடகங்கள், இசை, நடனம், மேஜிக் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை 50 அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந் நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

More News >>