இந்திய பிரதமராக மோடி இருக்கும் வரை இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டி நடக்காது.. அப்ரிதி கூறுகிறார்
இந்திய பிரதமராக மோடி இருக்கும் வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற எந்த வாய்ப்பும் இல்லை என்று பாக். முன்னாள் வீரர் அப்ரிதி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஷாகித் அப்ரிடி அரப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது: இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்திய மக்கள் எனக்கு அளித்த அன்பு, ஆதரவு குறித்து நான் பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளேன். இப்போதும் சமூக இணைய தளங்களில் என்னுடைய கருத்துக்களுக்கு பல இந்திய ரசிகர்கள் பதில் அனுப்புகின்றனர். அவர்களுக்கு நானும் திருப்பி பதில் கொடுப்பதுண்டு.இந்தியாவுக்கு சென்று கிரிக்கெட் விளையாடிய தருணங்களை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இந்தியா, பாகிஸ்தான் இடையே இருந்த கிரிக்கெட் உறவில் தற்போது பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. முறிந்த தொடர்பை மீண்டும் புதுப்பிக்க பாகிஸ்தான் அரசு தயாராகத் தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போதைய ஆட்சி இருக்கும் வரை அதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் வரை இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் உறவில் மாற்றம் ஏற்படும் என நான் கருதவில்லை.
உலக கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய பிராண்டாக ஐபிஎல் கருதப்படுகிறது. பாகிஸ்தானின் பாபர் அஸம் உள்பட சிறந்த வீரர்களுக்கு அதில் விளையாட முடிந்தால் அது பெரிய ஒரு வாய்ப்பாக அவர்களுக்கு இருக்கும். பல வெளிநாட்டு வீரர்களுடன் சேர்ந்து விளையாடுவது அவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாதது பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரும் நஷ்டமாகும். இவ்வாறு அவர் கூறினார்.