வேளாண் சட்டங்களை எதிர்த்து காஞ்சி கீழம்பி கிராமத்தில் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்..

வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சி கீழம்பி கிராமத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2 வேளாண் சட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், அவற்றை ஆதரித்த அதிமுக அரசைக் கண்டித்தும் செப்.28-ம் தேதி மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சி, ஒன்றிய தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கடந்த 21-ம் தேதி சென்னையில் நடந்த திமுக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி கிராமத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், எழிலரசன் எம்.எல்.ஏ மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, காஞ்சிபுரம் கீழம்பி கிராமத்திற்கு வந்து சேர்ந்த ஸ்டாலின், வயல்வெளிக்கு சென்று அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த பெண்களிடம் பேசினார். அவர்கள் ஸ்டாலினுடன் உற்சாகமாக பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்ற போது, கருப்புசிவப்பு துண்டு போடுவதற்கு பதிலாக விவசாயிகளின் நிறமான பச்சைத் துண்டை கழுத்தில் போட்டிருந்தார். பச்சை முகக்கவசமும் அணிந்திருந்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், அதிமுக அரசைக் கண்டித்தும் பல்வேறு கோஷங்களை ஸ்டாலின் உள்பட கட்சியினர் எழுப்பினர்.

இதே போல், சென்னை கொருக்குப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, வடசென்னை மாவட்ட திமுக செயலாளர் சுதர்சனம், கந்தன்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் பங்கேற்றனர். சென்னை மாவட்டக் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்றனர். வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பங்கேற்றார்.

More News >>