அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாக போட்டி கோஷங்கள்..
அதிமுக செயற்குழுவுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வந்த போது, அவரவர் ஆதரவாளர்கள் போட்டி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழலில், இன்று(செப்.28) காலை 10 மணிக்கு கட்சியின் செயற்குழு கூடியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு 284 செயற்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருமே உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் வரவில்லை. சுமார் 265 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வந்த போது, வருங்கால முதல்வர் என்று அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் முகமூடியும் அணிந்திருந்தனர். மேலும் ஓ.பி.எஸ். காரை விட்டு இறங்கும் போதே பூக்களைத் தூவி வரவேற்றனர்.அடுத்து முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்த போது அவரது ஆதரவாளர்களும் மலர்களைத் தூவி வரவேற்றனர். சாமான்யர்களின் முதல்வரே என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், முதல் மாடியில் உள்ள அரங்கில் கூட்டம் தொடங்கியது. மேடையில் அவைத் தலைவர் மதுசூதனன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் அமர்ந்தனர். தொடர்ந்து 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்திற்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கியை உடனடியாக தர வேண்டும், மாநிலத்தில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்பது உள்பட மத்திய அரசை வலியுறுத்தி சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம், மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக பாஜக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியில் ஒற்றைத் தலைமை பற்றி எதுவும் முடிவெடுக்கப்படாது என்பது கடைசி தீர்மானத்தில் தெளிவானது. அதில், அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.