டெல்லி ராஜபாதையில் இளைஞர் காங்கிரசாரின் டிராக்டர் எரிப்பு போராட்டம்..
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் போராட்டத்தில் டிராக்டரை எரித்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 2 வேளாண் சட்டங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இ்ந்நிலையில், டெல்லியில் இளைஞர் காங்கிரசார், டிராக்டருக்கு தீ வைத்து கொளுத்தி போராட்டம் நடத்தினர். இந்தியா கேட் பகுதியில் இருந்து ராஷ்டிரபதி பவன் செல்லும் பாதை ராஜபாதை அழைக்கப்படுகிறது. இந்த பகுதி வி.வி.ஐ.பிக்கள் செல்லும் பாதை என்பதால், எந்நேரமும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.அந்தப் பகுதியில் 20, 30 இளைஞர் காங்கிரசார் இன்று காலை வந்து தர்ணா போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். பின்னர், ஒரு மினி லாரியில் பழைய டிராக்டர் இன்ஜின் ஒன்றை கொண்டு வந்து அங்கு இறக்கினர். அந்த இன்ஜின் மீது தீ வைத்து கொளுத்தினர். இதையடுத்து, டெல்லி போலீசார் அவர்களை கைது செய்து கொண்டு சென்றனர்.