ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து ஈராக் மீது தாக்குதல் நடத்திய கேரள வாலிபருக்கு ஆயுள் சிறை
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ஈராக் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கேரளாவை சேர்ந்த தீவிரவாதிக்கு என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் சிறை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2016ல் கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கனகமலை வனப்பகுதியில் தீவிரவாதிகள் ரகசிய கூட்டம் நடத்துவதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்திய சோதனையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உள்பட ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா உள்பட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதற்காக இவர்கள் சிவகாசிக்கு சென்று வெடிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இக் கும்பலில் கேரள மாநிலம் மூவாற்றுபுழாவை சேர்ந்த சுபுஹானி காஜாமைதீன் என்பவரும் இருந்தார். இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கடந்த 2014ம் ஆண்டு துருக்கி வழியாக ஈராக் சென்ற இவர், அங்கு ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் பயிற்சி பெற்றார். பின்னர் அவர் ஈராக் நாட்டு ராணுவத்திற்கு எதிராக ஐஎஸ் இயக்கத்தினருடன் சேர்ந்து தாக்குதல் நடத்தினார். இதன் பின்னர் இவர் கேரளா திரும்பினார்.கேரளா திரும்பிய பின்னர் டெலிகிராம், பேஸ்புக் உட்பட சமூக இணையதளங்கள் மூலம் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த 2016ம் ஆண்டு கனகமலையில் வைத்து இவர் பிடிபட்டார். இவர் மீது இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது, நட்பு நாடான ஈராக்குக்கு எதிராக தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றங்கள் சுமத்தப் பட்டன. இந்த வழக்கு கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார், தீவிரவாதி சுபுஹானி காஜாமைதீனுக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.