சஞ்சு சாம்சன் அடுத்த தோனி ஆக வேண்டிய அவசியம் இல்லை காம்பீர் கூறுகிறார்..
அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி ஆக வேண்டிய அவசியம் இல்லை. அவர் சஞ்சுவாக இருந்தாலே போதும் என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் 74 ரன்களும், நேற்று பஞ்சாப்புக்கு எதிராக 85 ரன்களும் இவர் எடுத்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவரும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இதுவரை ஒரு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. தொடக்கம் முதலே இவருக்கு ஆதரவாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்பியுமான கவுதம் காம்பீர் இருந்து வருகிறார்.
சென்னைக்கு எதிரான போட்டியில் சஞ்சுவின் அதிரடி ஆட்டத்தைப் புகழாதவர் யாருமே இல்லை. ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, டெண்டுல்கர் உட்படப் பல வீரர்களும் சஞ்சுவின் அதிரடி ஆட்டத்தைப் புகழ்ந்து தள்ளினர். சஞ்சுவின் நேற்றைய அதிரடி ஆட்டத்தையும் பலர் பாராட்டினர். காங்கிரஸ் எம்பியான சசிதரூர் தனது டிவிட்டரில் கூறுகையில், சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி என்று குறிப்பிட்டிருந்தார்.
சசி தரூருக்கு கவுதம் காம்பீர் பதில் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனியாக வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அவர் சஞ்சுவாக மட்டும் இருந்தாலே போதும். சஞ்சு வெறும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டுமல்ல, இந்தியாவில் மிகவும் திறமை உள்ள இளம் வீரர்களில் ஒருவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.