சென்னையில் தொடங்கிய கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனை ..
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கியது.பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா என்ற மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டு உள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியைப் போட்டு அவர்களுடைய உடல்நிலையைப் பரிசோதிக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, பிரிட்டனில் இந்த கொரோனா தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டவர்களில் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு இந்த பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பிரிட்டனில் சோதனைகளை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்று கூறி அனுமதி கொடுத்ததையடுத்து, அஸ்ட்ரா ஜெனகே என்ற நிறுவனம் பரிசோதனையைத் தொடங்கியது.
இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானது தான் என இங்கிலாந்து அமைப்புகள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிசீலித்தது. அதன் முடிவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. பரிசோதனையில் பங்கேற்கும் தன்னார்வலர்களின் பட்டியலுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் மீண்டும் கோவிஷீல்ட் மீதான பரிசோதனை தொடங்கியது. தற்போது சென்னையிலும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து மீதான பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் தனியார் மருத்துவமனையில் இந்த பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனையில் கலந்துகொள்ளும் தன்னார்வலர்களுக்கு இந்த மருந்தைச் செலுத்தி, அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 16 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.