பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல்... இன்டர்போல் உதவியை நாட சிபிசிஐடி போலீசார் முடிவு...
நாகர்கோவில் கணேசபுரத்தை ஸர்வதா காசி என்ற வாலிபர் சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக சில நாட்களுக்கு முன் கைதானார்.சென்னை பெண் டாக்டர் உட்பட ஏராளமான இளம் பெண்களிடம் சமூக வலைத்தளங்களில் பழகி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு இவர் தனது நண்பர்கள் உதவியுடன் மிரட்டியதாகப் புகார் வந்தது. இது தொடர்பாகக் காசி 26, மற்றும் அவனது கூட்டாளிகள் டைசன் ஜீனோ 19, கணேசபுரத்தைச் சேர்ந்த தினேஷ் ஆகியோர் கைதானார்கள். இது குறித்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தற்போது வேகம் எடுத்துள்ளது. காசி மீது கோட்டார், நேசமணி நகர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இளம்பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆபாசப் படம் எடுத்து மிரட்டுதல், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மட்டும் இரண்டு வழக்குகளும், பிற காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வழக்குகளிலும் தனித்தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து உள்ளனர். நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த 2 வழக்குகளிலும் ஒரு வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளனர். ஒரு மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் டிஎஸ்பி அணில் குமார் தலைமையிலான போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெண்களுக்கு பாலியல் தொல்லை, ஆபாசப்படம் எடுத்து மிரட்டல் வழக்கில் காசியின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட வேண்டியுள்ளது.
அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் முடுக்கி விட்டுள்ளார். அவரை கைது செய்வது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு வாரங்களில் அவர் கைதாகவில்லை எனில் இன்டர்போல் போலீஸ் உதவியை நாட சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.