வோடோபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய ஐடியா .. 3 ஜியிலிருந்து 4 ஜி சேவைக்கு தரம் உயர்த்த முடிவு..!
வோடபோன் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் வீ ஐ எனப் பெயர் மாற்றப்பட்ட பின்பு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சரிவினை மட்டுமே கண்டுள்ளது. அதுவும் குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர், கடும் போட்டியைச் சந்தித்த வோடோபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள், கடந்த 2018ல் கூட்டணி அமைத்தன. இதற்கிடையில் வோடபோன் ஐடியா நிறுவனங்கள், கடந்த மாதம் வீ ஐ என்ற புதிய பிராண்டை அறிவித்தது .
இதையடுத்து போட்டி நிறுவனங்களைச் சமாளிக்கும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு, அதிவேக டேட்டா சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் 3ஜி சேவையிலிருந்து 4ஜி சேவைக்கு மாற்ற அந்த நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. இதை பல்வேறு கட்டங்களாக நிறைவேற்ற வீ நிறுவனம் முடிவு செய்துள்ளது.அதே நேரம் 2ஜி சேவை மூலம் வாடிக்கையாளர்களுக்குக் குரல் அழைப்பு சேவை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜி பயனர்கள் சேவை 4ஜி சேவைக்கு மேம்படுத்தப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்களுக்கும் வோடபோன் அறிவிக்கத் தொடங்கியுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டில் அதிக அளவு ஸ்பெக்ட்ரம் மற்றும் அதன் பெரும்பகுதி ஏற்கனவே 4ஜிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், வோடபோன் நிறுவனம் தற்போது 2 ஜி மற்றும் 3 ஜி வாடிக்கையாளர்களை 4ஜி சேவைகளுக்கு மேம்படுத்த உள்ளது என்று வோடபோன் ஐடியா நிறுவனம் நிர்வாக இயக்குனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரவீந்தர் தக்கார் தெரிவித்துள்ளார்.
தற்போது வோடபோன் நிறுவனத்தில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மாதத்தில் 30.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதோடு 11.6 பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. மேலும் 10.4 கோடி வாடிக்கையாளர்கள் 4ஜி வாடிக்கையாளர்களாகும். மீதமுள்ளவர்கள் 3ஜி வாடிக்கையாளர்களாகும். கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வோடபோன் நிறுவனம், தற்போது அதன் சேவையினை மேம்படுத்தத் தொடங்கியுள்ளது. போட்டி நிறுவனங்கள் 4ஜி சேவையினை வழங்கி வரும் நிலையில், தற்போது தான் வோடபோன் நிறுவனம் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது. எனினும் இது போட்டி நிறுவனங்களுடன் போட்டிப் போட வோடபோன் நிறுவனத்திற்கு உதவும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.