சபரிமலையில் மண்டல காலம் முதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் மண்டலக் காலம் முதல் பக்தர்களை நிபந்தனைகளுடன் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு சட்டத்தில் படிப்படியாக நிபந்தனைகள் தளர்த்தப் பட்டிருப்பதால் தற்போது அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேபோல சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்குப் பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டலக் காலம் முதல் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்துத் தீர்மானிப்பதற்காக இன்று திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தலைமைச் செயலாளர், டிஜிபி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் மண்டலக் காலம் முதல் கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
பக்தர்களை எவ்வாறு அனுமதிப்பது, சபரிமலையில் புதிதாக மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆலோசிப்பதற்காகத் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் ஒரு கமிட்டியை அமைக்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த கமிட்டி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த அறிக்கையின் படியே பக்தர்களை அனுமதித்துக் குறித்த இறுதி முடிவை எடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் வாசு கூறுகையில், சபரிமலையில் மண்டலக் காலம் முதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணமாகும். கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி மட்டுமே பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நெய்யபிஷேகம் செய்வதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். சபரிமலையில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அளிக்கும் அறிக்கையின் படியே பக்தர்களை அனுமதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.