பூசாரியாக நடித்து பண மோசடியில் ஈடுபட்டவர் தீவிரவாதியா? என்ஐஏ விசாரணை..

கேரளாவில் பூசாரியாக நடித்து ஒரு குடும்பத்தினரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த வாலிபர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியுள்ளது.ஆலப்புழா அருகே உள்ள கோமல்லூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு ஒரு வாலிபர் அடிக்கடி வந்து செல்வதை அப்பகுதியினர் கவனித்தனர். இதுகுறித்து அந்த வீட்டினரிடம் அப்பகுதியினர் விசாரித்தபோது, அவர் பூசாரி என்றும் சில பூஜைகள் நடத்துவதற்காக வீட்டிற்கு வந்து செல்வதாகவும் கூறினர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அந்த வீட்டைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஆலப்புழா குறத்திக்காடு போலீசில் ஒரு புகார் செய்தார்.

அதில், தங்களது வீட்டுக்கு வந்த பூசாரி ஒருவர் பூஜை செய்வதாகக் கூறி தங்களிடமிருந்து 4 லட்சம் பணம் மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த மோசடி ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் அவர் பூசாரி அல்ல என்றும் அவரது பெயர் பைசல் (36) என்றும் தெரியவந்தது. ஒரு முஸ்லிம் வாலிபர் இந்து பூசாரி போல நடித்து மோசடியில் ஈடுபட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் இதே போலப் பலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வாலிபருக்கு தீவிரவாத தொடர்பு இருக்கலாம் எனத் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று என்ஐஏ அதிகாரிகள் குறத்திக்காடு போலீஸ் நிலையத்திற்குச் சென்று பைசல் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர். தேவைப்பட்டால் பைசலைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்ஐஏ தீர்மானித்துள்ளது.

More News >>