சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1283 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில்தான் தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.

தமிழக அரசு நேற்று (செப்.28) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5589 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 86,397 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இதில் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5554 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 30,798 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 70 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 9383 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 306 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கடந்த மாதத்தில் புதிதாகத் தொற்று பாதிப்பது 900 பேராகக் குறைந்திருந்தது. ஆனால், மீண்டும் இது அதிகரித்து 1200ஐ தாண்டியுள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1283 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 147 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 64,744 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 249 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 249 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 34,855 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 31,887 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.

கோவை மாவட்டத்தில் 587 பேருக்கும், சேலத்தில் 256 பேருக்கும், ஈரோட்டில் 133 பேருக்கும், திருப்பூரில் 198 பேருக்கும், கடலூரில் 162 பேருக்கும், நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 145 பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் 137 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது.அதே போல், தஞ்சாவூர் மாவட்டத்தில் 180 பேருக்கும், திருவண்ணாமலை 151, திருவாரூர் 128, வேலூர் 125 மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 131 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்குத் தொற்று பாதித்துள்ளது.

More News >>