மனைவியை அடித்து உதைத்த வீடியோ வைரல் டிஜிபி அதிரடி இடமாற்றம்..!
குடும்பத் தகராறில் மனைவியை அடித்து உதைத்த மத்தியப்பிரதேச மாநில டிஜிபி புருஷோத்தம சர்மா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.மத்தியப் பிரதேச மாநில டிஜிபியாக இருப்பவர் புருஷோத்தம சர்மா. 1986ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வான இவர் சட்டப்பிரிவு டிஜிபியாக உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் புருஷோத்தம் சர்மா தனது மனைவியை வீட்டில் வைத்து அடித்து உதைக்கும் காட்சிகள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவியது.
இவர் மனைவியைக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகளை அவரது மகன் தனது செல்போனில் பதிவு செய்து மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நமோத்தம் மிஸ்ரா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். புருஷோத்தம சர்மாவின் மகன் உத்தரப்பிரதேசத்தில் வருமான வரித்துறை துணை கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டிஜிபி புருஷோத்தம சர்மா அதிரடியாக அந்த பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். தேசிய மகளிர் ஆணையமும் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. ஆனால் இது சாதாரண குடும்பத் தகராறு தான் என்று டிஜிபி புருஷோத்தம சர்மா கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்குத் திருமணமாகி 32 வருடங்கள் ஆகிவிட்டன. இதுவரை ஒரே ஒரு முறைதான் என்னைப் பற்றி எனது மனைவி புகார் கொடுத்துள்ளார். அதன் பின்னர் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர் என்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். என்னுடைய பணத்தில் ஆடம்பரமாக அவர் வாழ்ந்து வந்தார். நான் அடிக்கடி அவரை கொடுமைப்படுத்தும் கணவன் என்றால் அவர் என்னுடன் இத்தனை வருடங்கள் சேர்ந்து வாழ்வாரா என்று கூறுகிறார். டிஜிபி புருஷோத்தம சர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், அது தான் இந்த தகராறுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. டிஜிபி சர்மாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச மாநில மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.